search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை பெரிய கோவில்"

    • இன்று தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • நவராத்திரி நாட்களில் தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

    நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    விழாவின் முதல் நாளான இன்று பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) மீனாட்சி அலங்காரமும், 27-ந் தேதி சதஸ் அலங்காரமும், 28-ந் தேதி காயத்திரி அலங்காரமும், 29-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும் நடைபெறுகிறது. 30-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி அலங்காரமும், 1-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 2-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • ஏ.டி.எம். மையத்துக்குள் வங்கியின் ஏற்பாட்டின்படி தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் ஆயிரம் ஆண்டை கடந்த பெரிய கோவிலின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
    • ஏ.டி.எம். மையம் அறை முழுவதும் தஞ்சையின் பெருமைக்குரிய அடையாளங்கள் இடம் பிடித்துள்ளதால் பணம் எடுக்க வருபவர்கள் அதனை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர்- புதுக்கோட்டை சாலை காவேரி நகரில் யூனியன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் வங்கியின் ஏற்பாட்டின்படி தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் ஆயிரம் ஆண்டை கடந்த பெரிய கோவிலின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதேப்போல் புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மைகள், கலை சிற்பங்கள் ஆகியவையும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. ஏ.டி.எம். மையம் அறை முழுவதும் தஞ்சையின் பெருமைக்குரிய அடையாளங்கள் இடம் பிடித்துள்ளதால் பணம் எடுக்க வருபவர்கள் அதனை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    பல வகைகளில் தஞ்சையின் பெருமை வெளிப்படுத்தி வரும் நிலையில் ஏ.டி.எம். அறையிலும் ஓவியமாக வரைந்துள்ளது வித்தியாசமாகவும், அதே வேளையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும் தஞ்சைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் இந்த வங்கி ஏ.டி.எம்.மில் பண பரிவர்த்தனை செய்யும்போது இந்த ஓவியங்கள் மூலம் தஞ்சையின் பெருமைமிக்க அடையாளங்களை தெரிந்து கொள்ள மேலும் வசதியாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் பெருமைப்பட கூறினர்.

    • பாதயாத்திரையின் போது 6 கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
    • பெரியகோவிலில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்புவழிபாடு நடைபெற்றது.

    திருப்புகழில் குறிப்பிடப்படும் ஆறுபடைகளில் முருகப்பெருமான் எவ்வாறு எழுந்தருளி உள்ளாரோ? அதே போல் தஞ்சை மாநகரில் உள்ள 6 கோவில்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வரும் வகையில் தஞ்சையில் ஆண்டுதோறும் வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு 44-வது ஆண்டாக வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை குழுவினர் தஞ்சை பெரியகோவிலில் இருந்து நேற்றுகாலை புறப்பட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முதலில் இந்த பாதயாத்திரை குழுவினர் மேலஅலங்கத்தில் உள்ள முருகன்கோவிலுக்கு (திருப்பரங்குன்றம்) சென்றனர்.

    தொடர்ந்து வடக்கு அலங்கம் முருகன் கோவில் (பழமுதிர்ச்சோலை), குறிச்சி தெரு முருகன் கோவில் (திருத்தணி), தஞ்சை ஆட்டுமந்தைத்தெரு முருகன்கோவில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத்தெரு முருகன் கோவில் (பழனி) ஆகிய கோவில்களுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் சென்றனர். இறுதியாக தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு (திருச்செந்தூர்) பக்தர்கள் சென்றனர்.

    பாதயாத்திரையின் போது 6 கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆறுபடை முருகனையும் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தஞ்சை பெரியகோவிலில் பாதயாத்திரை நிறைவடைந்தது. இதையடுத்து பெரியகோவிலில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்புவழிபாடு நடைபெற்றது. பாதயாத்திரையின் முன்பு பெண்கள், ஆண்கள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். மேலும் முருகன், வள்ளி, தெய்வானையுடன் இருந்த சிறிய சப்பரமும் பக்தர்களால் இழுத்து வரப்பட்டது.

    • தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
    • பெரிய கோவிலில் அனைத்து மூலவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்திபெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. மேலும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

    தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. தஞ்சை பெரிய கோவிலில் ஆடிப்பூரம், ஆருத்ரா தரிசனம், மகர சங்கராந்தி பெருவிழா போன்றவை சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த நிலையில் நேற்று ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, பெரிய கோவிலில் அனைத்து மூலவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில், பால், மஞ்சள், இளநீர், கரும்புசாறு, நெய், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    மேலும், உலகம் அமைதி பெற வேண்டியும், நீர், நிலவளம் பெருக வேண்டியும், நல்ல மழை பெய்ய வேண்டியும் சிறப்பு அபிஷேக தீபாராதனை காண்பிக்கப்பட்டன. அத்துடன், நுாற்றுக்கணக்கான வளையல்களை கொண்டு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், அரண்மனை தேவஸ்தான அதிகாரிகள் செய்து இருந்தனர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாண வைபவம் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    உலகம் போற்றும் தஞ்சை மாநகரின் சிறப்புக்கு தனிப்பெரும் காரணமாக தஞ்சை பெரியகோவில் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜ சோழனால் வானளாவிய உயர்ந்த விமானத்துடன் எழுப்பப்பட்ட இந்த கோவிலில் பெரியநாயகி உடனாகிய பெருவுடையார் எழுந்தருளியுள்ளார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமண தோஷமுடையவர்கள் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்க திருக்கல்யாண வைபவம் நேற்றுமாலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பழங்கள், குங்குமம், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, இனிப்பு வகைகள், புஷ்பம், தாம்பூலம், ரவிக்கை துணி, வெற்றிலை, பாக்கு போன்ற சீர்வரிசை தட்டுகளுடன் சொக்கநாதர் சன்னதியில் இருந்து புறப்பட்டு நடராஜர் முன் மண்டபத்திற்கு வந்தடைந்தனர். இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன.

    தொடர்ந்து ஹோமம் முடிவடைந்த பிறகு பெரியநாயகி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெரியநாயகி சமேத பெருவுடையார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திருமணம் நடைபெறாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பெரியநாயகி அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடந்தது.
    • வராகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேலும் வராகி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

    இந்த வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த மாதம் 28-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் வராகி அம்மனுக்கு தினமும் அலங்காரமும், மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வராகி அம்மன் மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய்ப்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகைகள், காய்கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆஷாட நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று வராகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலை 5 மணி அளவில் கோவில் வளாகத்தில் நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம், சாமி வேடமணிந்த கலைஞர்களின் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள், ஆஷாட நவராத்திரி விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • ஆஷாட நவராத்திரி விழா வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆஷாட நவராத்திரி விழா வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேலும் வராஹி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கணபதி அபிஷேகம், வராகி அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் வராகி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு தினமும் அலங்காரமும், மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள், ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • 1887 ஆம் ஆண்டு, ஈ. ஜே. ஹுல்ஸ் என்ற ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளரை தஞ்சை பெரிய கோவில் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணம் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
    • ஹுல்ஸ் புகைப்படம் எடுப்பதில் வல்லவர், இதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றியவர்.

    தஞ்சை பெரியகோவிலின் பெருமை வாய்ந்த வரலாறு அதன் சுற்றுசுவர்களில் பொறிக்கப்பட்டு இருந்தும் கூட, உள்ளூர் மக்கள் பெரிய கோவிலை ஆவணப்படுத்த தவறி விட்டார்கள். 1860-க்கு முன்னர் கோவிலின் வரலாறு யாருக்கும் தெரியாத நிலையிலேயே 800 ஆண்டுகளாக இருந்து வந்தது...

    1858-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் தஞ்சையின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்ட பிறகு, புனித பீட்டர்ஸ் பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்த, ஆங்கிலேய கிருத்துவ பாதிரியார் மற்றும் தலை சிறந்த தமிழ் அறிஞருமாகிய ஜி.யூ.போப், பெரிய கோவிலை ஆவணப்படுத்துமாறு கோரப்பட்டார்.

    அதன் விளைவாக தஞ்சை பெரிய கோவில், ஒரு சோழ மன்னரால் கட்டப்பட்டது என்று ஆவணப்படுத்திய முதல் நபர் அவர்தான். உள்ளூர் அறிஞர்களிடமிருந்து விசாரித்ததில் பெரிய கோயில் "காஞ்சிபுரத்து காடுவெட்டி சோழர்" என்பவரால் கட்டப்பட்டது என்பதை அறிந்து அவர்கள் சொன்னதை வைத்து வெளியிட்டார்.

    பிற்காலத்தில் தான் முழு உண்மை தெரிய வந்தது... 1887 ஆம் ஆண்டு, ஈ. ஜே. ஹுல்ஸ் என்ற ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளரை தஞ்சை பெரிய கோவில் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணம் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

    ஹுல்ஸ் புகைப்படம் எடுப்பதில் வல்லவர், இதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றியவர். அவர்தான் பெரிய கோவிலின் பூர்வீகத்தை 800 ஆண்டுகளுக்குப் பிறகு, நம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டியவர். முழு அத்தியாயமும் பெரிய கோவிலின் அடிவாரத்தில் செதுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து, இந்த மாபெரும் பிரஹதீஸ்வரர் ஆலயம் 1010 ஆம் ஆண்டில், ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டதாக உலகுக்கு கூறினார்!

    இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. இதன் மூலம் தான் தமிழர்களின் பழங்கால செழிப்பும், வளமும் உலகிற்கு தெரிய வந்தது. பெரிய கோவில் பற்றி அவர் எடுத்த புகைப்படங்கள், பிரிட்டிஷ் நூலகத்தில் இன்றும் நன்கு பாதுகாக்கப்படுகின்றன.

    1000 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பெரிய கோவில் பூகம்பங்கள், படையெடுப்புகள், திருட்டு, சூறை மற்றும் காழ்ப்புணர்ச்சியை தாங்கி இன்று வரை கம்பீரமாக நிற்பது ஒரு மாபெரும் அதிசயம்.

    800 ஆண்டுகள் தொடர்ச்சியாக படையெடுப்பு, சண்டை... 1279ல் பாண்டியர்கள் தஞ்சாவூரை இரண்டு முறை படையெடுத்து கைப்பற்றினர். தஞ்சாவூர் சோழர் அரண்மனை தரைமட்டமாக்கப்பட்டது. 1335ல் மாலிக் கஃபூரின் படைகளால் கடும் சோதனைக்கு உட்பட்டது. 1335ல் தில்லி சுல்தான் படையெடுப்பு.. 1350 முதல் 1532வரை தேவராயாவின் விஜயநகரின் ஆதிக்கம்... 1532முதல் 1673 வரை நாயக்கர்கள் ஆட்சி.. 1674முதல் 1855 வரை மராட்டியர் ஆட்சி.. 1855 முதல் 1947 வரை ஆங்கிலேயர்கள் ஆட்சி..

    1772 ஆம் ஆண்டில், கோவிலின் நுழைவு கூடம் பிரெஞ்சு படைவீரர்கள் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது. 1773 முதல் 1779 வரை ஆங்கிலேய படை சிறிய கோட்டையின் வடக்கு பகுதியை தங்குமிடமாக பயன்படுத்தினர். (தற்போதைய பதிவு அலுவலகம் / சிவ கங்கா பூங்கா இருக்கும் இடம் ).

    சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பெரிய கோவில், பார்ப்பதற்கு கருப்பாக இருக்கும். அதன் பிறகு தான் கரும் பாசி படிந்த, கோவிலின் முகப்பு கற்கள் "சாண்ட் பிளாஸ்டிங்" முறையில் சுத்தம் செய்யப்பட்டது. இதனால் இளஞ்சிவப்பு கிரானைட் கல் மேலும் நன்றாக தெரிய வந்தது. இதன் காரணமாகத்தான் பெரிய கோவில் தோற்றம் பிரகாசமாக மாறியது.

    1995 உலக தமிழ் மாநாட்டின் போது, திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் அவர்கள் பெரிய கோவிலின் வெளிப்புற ஒளி விளக்குகளை வடிவமைத்தார். அது மேலும் பிரகாசம் ஊட்டியது. கடந்த 15 வருடங்களாக 5 வருடத்திற்கு ஒரு முறை ரசாயன முறையில் கோபுர சிற்பங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.

    பெரிய கோவில் கட்ட உபயோகப்படுத்திய இளஞ்சிவப்பு கிரானைட் கற்கள் கிள்ளுகோட்டையின் தென்மேற்கு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. தற்போதைய நந்தி சிற்பம், நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டது. இது பெரம்பலூர் பச்சமலை அடிவார பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் மேல் உள்ள உருண்டை வடிவம் கொண்ட கலசம் போல இருக்கும் சிகரம் (கல் குவிமாடம்/ Dome) ஒரே கல்லில் வடிவமைத்தது அல்ல.. ஆறு பாகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட சிகரம் என்பதினை நேரில் பார்த்த ஆய்வாளர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

    -எஸ்.பி.அந்தோணிசாமி

    உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
    மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தஞ்சை மேலவீதியில் உள்ள தேர்நிலையில் தேர் அலங்கரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி வழியாக தேர் வலம் வரும். இதனால் அந்த சாலைகளில் குண்டும், குழியுமாக காணப்படும் பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் சாலையோரம் காணப்படும் மண் திட்டுகளும் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. தேரோட்டத்திற்கு கூட்டம் அதிகமாக வரும். அப்படி வருபவர்கள் நெரிசலில் சிக்கி சாலையோரம் இருக்கும் சாக்கடைக்குள் விழுந்துவிடாமல் இருக்க கம்புகளால் ஆன தடுப்புகள் மேலவீதி மற்றும் வடக்குவீதியில் உள்ள சாக்கடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

    மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் தேர் செல்லும்போது தட்டும் என்பதால் அந்த மின்விளக்குகளை எல்லாம் மாநகராட்சி பணியாளர்கள் திருப்பி வைத்துள்ளனர். மேலும் சாலையோரத்தில் வெள்ளை நிற வர்ணம் அடிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேரோட்டத்தை பார்க்க வரும் மக்களின் தாகத்தை போக்க மேலவீதியில் ஆங்காங்கே மாநகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

    சித்திரை தேரோட்டத் துக்காக தஞ்சை பெரியகோவில் தேர் அலங்கார பணிகள் தொடங்கப்படுவதையொட்டி பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
    தஞ்சை பெரியகோயில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 88 கோவில்களுள் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா 20 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு சித்திரைப் பெருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் காலை, மாலை வேளைகளில் சாமி புறப்பாடும், பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வருகிற 16-ந் தேதி தஞ்சையில் 4 ராஜ வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தேர் அலங்கரிக்கப்படவுள்ளது. இதற்காக நேற்று காலை 8 மணிக்கு மேல் தேரில் பந்தக்கால் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து அலங்கார பணிகள் தொடங்கின. இதையொட்டி சுரேஷ்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர் ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு நேரங்களில் தஞ்சையில் ராஜ வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 19-ந் தேதி மாலை கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    ×